சஞ்சனாவும் கார்த்திகையும்
மணி ஏழைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்தும் அலுவலகத்தில் குப்பைக்கொட்டிக் கொண்டிருந்தேன். ஆறு அடித்தவுடன் வீடுதேடி ஓடிப் பழகிய எனக்கு, கால்களும் கைகளும் ஒருபாடாக இருந்தபாடில்லை. டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே காலையில் முழித்துக்கொள்ளவும், மாலையில் வேலை செய்யவும் மனதை கயிறு போட்டு கட்டியிழுக்க வேண்டி இருக்கிறது. மானிட்டரில் இருக்கும் எழுத்துக்கள் அனைத்தும் ஸ்விம்மிங் அடிக்க ஆரம்பிக்க, இரண்டு கட்டன் காப்பிக்களை உள்ளே தள்ளி, நான்கு டாக்குமெண்ட்டுகளை அப்ரூவ் செய்து, அனைவருக்கும் ஒரு டாட்டா-பைபை சொல்லிவிட்டு, வண்டியை உதைத்து பறந்தேன். காலையிலேயே அவள் சொன்னாள். 'குளிர் காலம். சாய்ங்காலம் வரும்போது குளிரப்போகுது, ஜெர்கின்-அ எடுத்துட்டு போயேன்'-ன்னு. 'சென்னையிலே குளிர்-ஆமா,' என்று திமிராக வந்த எனக்கு பற்கள் டான்ஸ் ஆடுற தண்டனை தேவை தான். டிராபிக் எல்லாம் தாண்டி வந்தால், அகழ்வாராச்சியா இல்லை மெட்ரோ வேலையா என்று குளம்பும் அளவுக்கு ஏரியா முழுக்க புழுதி. பாதி கரி படிய பக்கத்துத் தெருவுக்குள் வண்டியைத் திருப்பினால் லைன்-ஆக, பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் விளக்குகள். கார்த்திகை. சிறுவயிதிலெல்லாம் கார்த்திகை என்றாலே பிடிக்காது. புது டிரஸ், தீபாவளியில் மீதமான வெடி, பலகாரம், எல்லாம் இருந்தும், மாற்றி மாற்றி கார்த்திகை சரியாக என் பிறந்தநாளன்றே வந்துத் தொலையும். பிரெண்ட்ஸ் யாரும் ஸ்கூல் முடித்து கேக் வெட்ட வீட்டிற்கு வரமாட்டார்கள். கேட்டால் 'தீபம் அன்னிக்குமா குழந்தைங்கள யாரு வெளிய அனுப்புவா. அதான் பட்டாசு, புது ட்ரெஸ்ஸு எல்லாம் இருக்குதில்ல. அப்புறம் என்ன இவளுக்கு..' என்பாள் அம்மா. கோவம் கோவமாக வரும். ஏதேனும் சமாதானம் சொல்லி, சரிசமமாக அருகே நின்று பட்டாசு வெடித்து, எக்ஸ்ட்ரா டிவி டைம் குடுத்து என் கவனத்தை திசை திருப்புவார் அப்பா. வருடம் பல ஓடி, மேல் படிப்பிற்காக குடும்பமே சென்னையில் வந்து செட்டில் ஆகி ஒரு வருடம் இருக்கும். எப்பொழுந்தும்போல், K4-இல் நேரே வந்து இறங்காமல், ரவுண்டு டானா-விற்கு பஸ்ஸில் வந்து இறங்கி, மிளிரும் கடை லைட்டுகளை ஆ-வென்று பார்த்துக்கொண்டே வீடு நடந்து வருகையில், பக்கத்துக்கு தெருவிற்குள் வந்தவுடன் கவனித்தேன், வரிசையாக, கண்ணிற்கு தெரியும்வரை விளக்குகள். நான் கேட்டு வந்த மெட்ராஸ் தான். நான் கேட்ட படிப்பு தான். ஆனால் எங்கே செல்கிறோம், பிடித்து படிக்கிறோமா, என்று ஒன்றுமே தெரியாத, கேள்விகள் மட்டுமே டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த கன்பியூஸ்ட் டீனேஜ் வாழ்க்கையில், என்னமோ கடவுளே வந்து விளக்கேற்றி வழிகாட்டியதுபோல் ஒரு அமைதிகலந்த சந்தோஷம். என்ன வழிகாட்டப்பட்டது என்றெல்லாம் கேட்டல் ஒரு பதிலும் இல்லை இப்போது. ஆனால், அந்த ஐந்து நிமிட நடை, பின்பு அந்த மாதம் முழுக்க அதே தெருக்களை தேடித் தேடி நடந்தபொழுது வந்து ஒரு நிம்மதி, அனைத்தும் ஒரேயடியாக உருண்டோடி வந்தன. வண்டியை உருட்டிக்கொண்டு வீடுவந்த எனக்கு, வாசலில் அவள் தலைமுடி காதின்பின் மெதுவாகத் தள்ளி, ஸ்லோ-மோஷனில் மண் விளக்கனைத்தயும், யோசித்து யோசித்து, டிசைன் பிடிக்கும் வரை மாற்றி மாற்றி அடுக்கும் காட்சி, ஸ்பெஷல் ஷோ-வாய். இருட்டிலும், போன மாதம் அவள் அவளுக்கே பரிசளித்துக்கொண்ட சில்வர் கம்மல், விளக்குகளின் ஒளியில் ஒரு விதமாக பிரகாசித்தன; திருவிளக்கின் ஒளி, அவள் கழுத்தில் துவங்கி, தோள்பட்டையில்.. காம்பௌண்ட் செவுறுகளை சுற்றி, ஒரு ஒரு விளக்காய், காற்றில் அணையாமலிருக்க ஒரு கையினால் பாதுகாத்து, லைன்-ஆக அடுக்கி, ஏதோ நினைவு வந்திருக்கும்போல, தனக்குத்தானே சிறிதாக சிரித்துக்கொண்டாள். எட்டு வருடம் முன்பு, சோஷியல் மீடியா-வில் துவங்கி, காதலாகி, கசிந்து, கண்ணீர்மல்க, போராடி அவளை என்னவளாக ஆக்கிக்கொண்டபோது என் சிறிய அறிவிற்கு என்ன எட்டியது என்று தெரியவில்லை.. இன்று இந்த தெருமுக்கில், வண்டி ஹெட்லைடை அணைத்து, ஹெல்மெட் அழுக்கினிடையே நேரம் தெரியாமல் அவளை கண் சிமிட்டாமல் பார்க்கும் எனக்குள் என்னமோ என்னத்தையோ பெரிதாக சாதித்துக் கிழித்த சிறு கர்வம். கார்த்திகையும் அழகுதான் போல, அவள் விரல் பட்டால்.. ** இது வரை படித்து வந்துவிட்டால், இந்த பாடலை பிளே செய்து விட்டு, போட்டோஸ்-ஐ பார்க்கவும். :)